யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்? பாகம் II

No Comments
முழுமையாக அறிந்துகொள்ள "யார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்? பாகம் I " ஐயும் படித்துவிட்டு  தொடருங்கள்....

இந்த கடல் காவலர்கள் கப்பல்களை,
  • எப்படி பிடிக்கிறார்கள்? 
  • பிடித்து எப்படி பணம் பெறுகிறார்கள்? 
  • அப்படி பிடித்தவர்களை எப்படி நடத்துகிறார்கள்?  
  • இது எப்போது இது முடிவுக்கு வரும்?

இந்த கேள்விகளுக்கான பதிலை நான் சொல்லுவதைவிட அவர்களில் ஒருவரான சாஇத் (saaid, Nick name) பிரபல இஸ்லாம் ஆன்லைன் தளத்திற்கு தந்த பேட்டி உங்கள் பார்வைக்காக...

கேள்வி : நீங்கள் எப்படி இதில்?

பதில்: நான் கடற்காவலனாக (Coastal Guard) ஆவதற்கு முன்பு, சோமாலியாவின் முடக் (Mudug) பகுதியில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தில் மீனவனாக இருந்தவன்.

சட்டவிரோதமாக எங்கள் கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக நாங்களே போராட முடிவெடுத்தோம்.  அதுமட்டுமல்லாமல், எங்கள் மீன்பிடி இயந்திரங்களை நாசமாக்கிய வெளிநாட்டு கயவர்களிடமிருந்து எங்கள் இயற்கை வளங்களை காப்பதற்காகவும் போராட முடிவெடுத்தோம்.

இப்படி சட்டவிரோதமாக எங்கள் கடலில் மீன்பிடிக்கும் கப்பல்கள் எங்களுக்கென்று எதையும் மிச்சம் வைத்ததில்லை. சில சமயங்களில் எங்கள் கடற்கரையிலிருந்து இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவிலேயே மீன்பிடிப்பார்கள். அப்போது எங்களிடம் AK-47 துப்பாக்கிகள் மற்றும் சிறிய அளவிலான ஆயுதங்கள் இருந்தன. ஆனால் சிறிய அளவிலான மோட்டார் படகுகள் (Skiffs) நிறைய இருந்தன.

ஒரு வெளிநாட்டு மீன்பிடி கப்பலை, சுமார் 200 படகுகளுடன் சென்று சுற்றிவளைப்போம், ஒவ்வொரு சிறிய படகிலும் AK-47 தாங்கிய மூன்று ஆட்கள் இருப்பார்கள். அந்த காலங்களில் யாரும் எங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவியதில்லை.

இப்படி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் வெளிநாட்டு கப்பல்கள் மட்டுமில்லாமல், இங்கே விஷக்கழிவுகளை கொட்டும் வெளிநாட்டு கப்பல்களையும் பார்த்திருக்கிறோம். இவைகள் தான் எங்கள் கடலில் மீன்கள் இறப்பதற்கும் எங்கள் மக்கள் உடல்நிலை கோளாறுகளால் பாதிக்கப்படுவதற்க்கும் காரணம். அதனால் இவர்கள் கழிவுகளை கொட்டுவதற்க்குள் பிடித்துவிட முடிவெடுத்தோம்.

கேள்வி:இதுவரை எத்தனை மீன்பிடி படகுகளை இழந்திருப்பீர்கள்?


பதில்: சோமாலியா ஒரு பெரிய நாடு. அதனால் எத்தனை படகுகளை நாங்கள் அனைவரும் இழந்திருப்போம் என்ற சரியான கணக்கு என்னிடம் கிடையாது. ஆனால் என்னுடைய அனுபவத்தை கூற முடியும். ஒருமுறை நாங்கள் 61 மீன்பிடி படகுகளுடன் சென்றிருந்தோம்.

நள்ளிரவு நேரம், எங்களில் சிலர் அசந்து தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்கு நடுவே ஒரு பெரிய கப்பல் கடந்து சென்றது. அதனால் ஏற்பட்ட கடல் மாற்றத்தால், எங்களில் சிலர் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள். 61 படகுகளில், ஒன்பது மட்டுமே மிஞ்சின. மிக துயரமான சம்பவம் அது.  

இது எனக்கு ஏற்பட்ட அனுபவம், இதுபோல நாடு முழுவதும் எங்கள் மீனவர்கள் படக்கூடிய கஷ்டங்களை யூகித்து கொள்ளுங்கள்.         

கேள்வி: கப்பல்களை கடத்துவதற்கு எம்மாதிரியான உக்திகளை கையாள்கிறீர்கள்?

பதில்: ஒரு பெரிய படகு மற்றும் இரு சிறிய அதிவேக படகுகளுடன் செல்வோம். சிறிய படகுகள் ஒவ்வொன்றிலும் ஐந்து பேர் இருப்பார்கள். அவர்களிடம் RPG (Rocket Propelling Granades) போன்ற ஆயுதங்களும், GPS (Global Positioning System) மற்றும் தானியங்கி தகவல் தரும் (AIS, Automated Information Systems) கருவிகள் போன்ற அதிநவீன கருவிகளும் இருக்கும்.

பக்கத்தில் சரக்கு கப்பல் வருவதாக தெரிந்தால், எங்கள் படகுகளுடன் சென்று அந்த கப்பலை முற்றுகையிட ஆரம்பிப்போம். எங்களின் இரு சிறு படகுகள் அந்த கப்பலை தாக்க ஆரம்பிக்கும். பெரிய படகோ அந்த சிறு படகுகளுக்கு பின்னாலிருந்து உதவிபுரியும். நாங்கள் கப்பலின் கேப்டன் இருக்கும் பகுதியைத்தான் தாக்குவோம். சில கேப்டன்கள் எங்கள் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்து விடுவார்கள், மற்றவர்களோ தங்கள் கப்பல்களை வேகமாக அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்துவார்கள்.

நாங்கள் கப்பலை பிடித்தால், அதன் கேப்டனிடம் பக்கத்திலுள்ள கடற்படை தளத்திற்கு, நாங்கள் அந்த கப்பலை பிடித்துவிட்டதாக தகவல் அனுப்ப சொல்வோம். பிறகு அந்த கப்பலை சோமாலிய கடற்கரையை நோக்கி எடுத்துச்  செல்வோம்.


கேள்வி:நீங்கள் அந்த கப்பலில் உள்ளவர்களிடம் எப்படி நடந்துக்கொள்வீர்கள்? அவர்களின் பொருட்களை எடுத்துக்கொள்வீர்களா ?

பதில்: கடத்தப்பட்டவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நாங்கள் வரைமுறைகள் (Code of Conduct) வைத்திருக்கிறோம். நாங்கள் அவர்களை மதிக்கிறோம். அவர்களின் பொருட்களையோ அல்லது கப்பலின் சரக்கையோ நாங்கள் தொடமாட்டோம். அவர்களை கட்டவோ அல்லது அவர்களிடம் பணமோ கேட்கமாட்டோம்.

எங்களுடைய அணுகுமுறையெல்லாம் அந்த கப்பலின் உரிமையாளரிடம்தான். எங்களுக்கு வேண்டியது பணம், அதை அந்த உரிமையாளரிடம் இருந்து மட்டும் தான் பெற நினைப்போம்.

கேள்வி: நீங்கள் கேட்ட பணம் உங்களுக்கு எப்படி வந்தடைகிறது?             

பதில்: நாங்கள் பணத்தை இரு வழிகளில் பெற்றுக்கொள்கிறோம். ஒண்ணரை மில்லியன் (15 லட்சம்) அமெரிக்க டாலர்களுக்கு அதிகமான தொகையாக இருந்தால், கடத்தப்பட்ட கப்பல் எந்த நாட்டைச்சேர்ந்ததோ அந்த நாட்டின் கடற்படை கப்பல்கள் மூலமாக பெற்றுக்கொள்வோம்.

அதற்கு குறைவான தொகையாய் இருந்தால், வேறு முறைகளில் பெற்றுக்கொள்வோம், உதாரணத்துக்கு ஹவாலா போன்றவை.

கேள்வி: பெற்ற பணத்தை எப்படி பிரித்து கொள்வீர்கள்?

பதில்: கப்பலை பிடித்தவர்கள் 50 சதவீதமும், இந்த கடத்தலுக்கு பொருளாதார உதவி புரிந்தவர்கள் 40 சதவீதமும், கப்பலை பாதுகாப்பது மற்றும் பேரம் பேசுவதற்கு உதவியவர்கள் 10 சதவிதமும் எடுத்துக்கொள்வார்கள்.


கேள்வி: கப்பலின் உரிமையாளர் பணம் கொடுக்க மறுத்துவிட்டால்?

பதில்: இதற்கு இரு வழிகளை கையாள்வோம். ஒன்று அந்த கப்பலில் உள்ளவர்களை, கேப்டனையும் சேர்த்து, கரைகளுக்கு அழைத்துச்  சென்று, நாங்கள் கேட்ட பணம் கிடைக்கும் வரை வைத்திருப்போம்.

இல்லையென்றால் கப்பலில் உள்ளவர்களை விடுவித்துவிட்டு அந்த கப்பலை வேறு கப்பல்களை கடத்துவதற்கு பயன்படுத்திக்கொள்வோம்.

கேள்வி: உங்களுக்கு யார் பண உதவிகளை செய்வது?

பதில்: குறிப்பிடும்படி யாரும் கிடையாது. எங்களுக்குள் பல பிரிவுகள் (Umbrella Groups)  உள்ளது. ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வோம்.

கேள்வி: நீங்கள் எங்கிருந்து ஆயுதங்கள் வாங்குகிறீர்கள்?

பதில்: சோமாலியாவிலேயே எல்லா நாட்டு ஆயுதங்களும் கிடைக்கும். பெரும்பாலும் நாங்கள் பக்கத்திலிருக்கும் நாடுகளில் இருக்கும், சட்டவிரோதமாக செயல்படும் ஆயுத வியாபாரிகளிடம் இருந்து வாங்குவோம்.

கேள்வி: குறிப்பாக எந்த நாடு?

பதில்: ஏமன்.

கேள்வி: நீங்கள் சந்தித்த பெரிய ஆபத்தான சூழ்நிலை என்ன ?

பதில்: ஒரு முறை நாங்கள் ஒன்பது பேர் ஒரு படகில் சோமாலிய கடற்கரையில் இருந்து 1000 மைல் தாண்டி சுமார் ஒரு மாதம் மூன்று நாட்களுக்கு மேலாக சென்றிருந்தோம். ஒன்றும் கிடைக்காததால் திரும்பி வந்துக்கொண்டிருந்தோம்.

சோமாலிய கடற்கரையிலிருந்து சுமார் 120௦ மைல் தூரத்தில் வந்துக்கொண்டிருக்கையில், கடலில் ஒரே புகைமண்டலம், பறவைகளின்  காட்டு கூச்சல் வேறு. கடல்நீரில் ஒரு வித மாற்றம், திடீரென்று எங்கள் படகு கடலில் பாதியளவு மூழ்கிவிட்டது, ஒருவரை தவிர அனைவரும் கடலில் விழுந்து விட்டோம், அந்த ஒருவர் தான் எங்களை காப்பாற்றினார்.

பிறகுதான் தெரிந்தது, அந்த புகைமண்டலம், விஷக்கழிவுகளை ஒரு கப்பல் அப்போது கொட்டிச்சென்றதால் ஏற்பட்டது என்று.

கேள்வி: இங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள கடற்படை கப்பல்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?

பதில்: அவர்கள் இங்கே சண்டைப் போடத்தான் இருக்கிறார்கள், அதனால் நாங்கள் எப்போதும் சண்டைக்கு தயாராக இருப்போம். 

அவர்களை நாங்கள் நடுக்கடலில் சந்தித்தால், எங்களில் சிலர் ஆயுதங்களை கடலில் எரிந்து விட்டு, தாங்கள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் (illegal immigrants) என்று சொல்லுவார்கள்.

வேறு சிலரோ அவர்களுடன் சண்டை புரிவார்கள், மற்றவர்களோ தப்பித்து ஓடுவார்கள். மூன்று படகு சென்றால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் தப்பித்து செல்லும். கடற்படை ஒன்றை துரத்த மற்ற இரண்டும் தப்பித்துவிடும்.
       

கேள்வி: உங்களுக்கென்று தலைவர்கள் யாராவது இருக்கிறார்களா? நீங்கள் ஒருவருக்கொருவர் எப்படி ஒத்துழைத்து கொள்கிறீர்கள்?

பதில்: நாங்கள் பல பிரிவுகளை சார்ந்தவர்கள், ஆனால் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து கொள்வோம். குறிப்பாக சொல்லப் போனால் இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று பண்ட்லாண்டிலும் (Puntland) மற்றொன்று தெற்கு மற்றும் மத்திய சோமாலியாவிலும் இருக்கின்றன. நான் முதலாவது பிரிவைச் சேர்ந்தவன்.

நாங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறோம், நல்ல தொடர்பு வைத்திருக்கிறோம். உதாரணத்துக்கு எங்களில் ஒரு பிரிவு ஒரு கப்பலை கடத்தி பணம் பெற்றால் அதை மற்றொரு பிரிவுக்கும் பகிர்ந்தளித்து விடுவோம்.

கேள்வி:சோமாலியாவின் அருகிலுள்ள துறைமுகங்களில் உங்களுக்கு உளவு சொல்ல உ ளவாளிகள் இருக்கிறார்களா?

பதில்: இல்லை. அப்படி யாரும் கிடையாது.   

கேள்வி: இது எப்போது முடிவுக்கு வரும்?

பதில்: சோமாலியாவில் சட்டஒழுங்கு சீர்ப்படும்போதும், உண்மையிலேயே இந்த உலகம் எங்கள் கடற்பகுதிகளை காக்க நினைக்கும்போதும், விஷக்கழிவுகள் கொட்டப்படுவது நிறுத்தப்படும்போதும் எங்கள் செயல்கள் முடிவுக்கு வந்துவிடும்.  எங்கள் நாட்டில் உள்ள சர்வதேச கடற்ப்படை கப்பல்களும் இங்கிருந்து வெளியேற வேண்டும். இவையெல்லாம் நடக்காவிட்டால் எங்கள் செயல்கள் தொடரத்தான் செய்யும்.                                             

" நான் சொல்ல வருவது, ஒரு பக்கம் எங்கள் கடற்பகுதிகளை சீரழித்துவிட்டு, மறுபக்கம் தரைப்பகுதியில் அமைதி கொண்டு வருவதாக நாடகமாடக்கூடாது என்பதுதான்."""" "

........End of Interview........

This extract of the interview was taken through Bro. Abdul karim Mohamed Jimale, freelance journalist for islamonline.net...


குற்றவாளிகள் உருவாகுவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள் என்று யாரோ சொன்னதாக ஞாபகம்...
 ஒருபுறம் விஷக்கழிவுகளையும், அணுக்கழிவுகளையும் கொட்டி கடலையும் மக்களையும் நாசமாக்கும் கொடுமை, மறுபுறமோ கிடைத்த மீன்களையெல்லாம் கொள்ளையடிக்கும் கும்பல். இந்த சூழ்நிலை தான் இவர்களை ஆயுதமேந்த வைத்திருக்கிறது. 



அமைதி ஏற்ப்படுத்துவதாக உள்ளே நுழைந்து உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு குளிர்க்காயும் சில நாடுகள் ஒருபுறம், தங்கள் வாழ்வாதாரமான கடலை அழித்துக்கொண்டிருக்கும் மனிதநேயமற்ற செயல்கள் மறுபுறம், நடுவில் சோமாலிய மக்கள். நினைக்கும் போதே நெஞ்சம் தடுமாறுகிறது. 


இன்னும் எவ்வளவு காலம் தான், பிரச்சினைகள் எங்கிருந்து ஆரம்பிக்கின்றன என்று பார்த்து அதை தீர்க்காமல், பிரச்சனைகளிலேயே கவனம் செலுத்த போகிறதோ உலகம்?   

0 கருத்துக்கள்:

Post a Comment